கண்ணன்கோட்டை நீர் தேக்க பணிகள் செப்டம்பர் மாதம் முடிக்கப்படும் அதிகாரிகள் தகவல்
கண்ணன்கோட்டை நீர் தேக்க பணிகள் செப்டம்பர் மாதம் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்குன்றம்,
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் மற்றும் நெமிலி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையம், கல் குவாரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களில் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது.
இது தவிர ஆரணி, கொசஸ்தலை ஆற்றுப்படுகைகளில் அமைந்துள்ள சிறுவானூர், மோவூர், கீழானூர், புல்லரம்பாக்கம், காரணை மேலானூர், மாகரல், வெள்ளியூர் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்தும் தண்ணீர் பெறப்படுகிறது. கோடை கால்ங்களில் பிரதான ஏரிகள் வற்றிவிடுவதால் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.
ரூ.330 கோடியில் நீர் தேக்கம்
இதனை கருத்தில் கொண்டும், சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக நிறைவேற்ற மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரிகளை ஒன்றிணைத்து ரூ.330 கோடி செலவில் 1485.64 ஏக்கர் நிலப்பரப்பில் நீர்தேக்கம் கட்டப்படும் என்று 2012-ம் ஆண்டு அறிவித்தார்.
இதில் 2 ஏரிகளின் பரப்பளவு 600 ஏக்கர் ஆகும். இந்த நிலம் விவசாயிகளின் பட்டா விளைச்சல் பூமி ஆகும். மீதம் உள்ள 285.64 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு மற்றும் வனப்பகுதியாகும். நிலம் கையகப்படுத்தும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.12 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. பண அவசியம் ஏற்பட்ட 55 சதவீத விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை ரூ. 12 லட்சம் பெற்று அரசுக்கு அளித்து விட்டனர்.
பணிகள் தொடக்கம்
இதையடுத்து அரசு 2013-ம் ஆண்டு நீர் தேக்கம் அமைக்கும் பணிகளை தொடங்கியது. இந்தநிலையில் 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளிடமிருந்து நிலம் ஆர்ஜிதம் செய்யும்போது மார்க்கெட் விலையைவிட 4 மடங்கு அதிக தொகை கொடுக்க வேண்டும் உத்தரவிட்டது. இதனால் மீதம் உள்ள 45 சதவீத விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 12 லட்சம் போதாது, ரூ.48 லட்சம் கொடுத்தால்தான் விளை நிலங்களை அளிப்போம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
இருப்பினும் ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தில் நீர்தேக்கம் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வந்து சேரும் தண்ணீர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு காட்டில் பாயும் ஓடைகளின் தண்ணீர் கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் சேமித்து வைக்க உள்ளனர்.
இதற்காக ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பத்தில் கிருஷ்ணா நதி கால்வாயின் குறுக்கே மதகுகள் அமைக்கும் பணி முடிந்து விட்டன. அதே போல் சத்தியவேடு காட்டில் உள்ள ஓடைகளின் தண்ணீர் நீர்தேக்கத்துக்கு வரும் விதமாக கால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. மேலும் 7.15 கிலோமீட்டர் தூரம் வரை கான்்கிரீட் கரைகள் அமைக்கும் பணிகள்் நிறைவடையும் நிலையில் உள்ளன. கரைகள் மீது வாகனங்கள் வந்து செல்லும் விதமாக சாலை அமைக்கும் பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளன. இந்த நீர் தேக்கத்தில் 1 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க உள்ளனர்.
செப்டம்பர் மாதம் முடிவடையும்
நீர்தேக்கம் முழுவதுமாக நிரம்பும் போது உபரி நீரை திறந்து விடுவதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீரை திறந்துவிட மதகு அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. நீர் தேகத்தில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீீர் வழங்க பெரிய தொட்டி அமைக்கும் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இப்படி சுமார் 60 சதவீத பணிகள் நிறைவு பெற்ற நிலையில் நிலம் வழங்காமலும், இழப்பீட்டு தொகை பெறாமல் இருந்த விவசாயிகள் 3 மாதங்களுக்கு முன் இழப்பீட்டு தொகை பெற்று கொண்டனர். இதனால் நடைபெறாமல் இருந்த பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் பழனிச்சாமி, உதவி செயற் பொறியாளர்கள் தில்லைக்கரசி, ரவிச்சந்திரன், உதவி பொறியாளர்கள் பாபு, அருள் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்று வரும் இ்ந்த பணிகள் செப்டம்பர் மாதம் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நீர் தேக்கத்தில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை சென்னை குடிநீர் வாரியம் மூலம் ராட்சத குழாய்கள் மூலம் பூண்டி ஏரிக்கு அனுப்பி வைத்து சென்னையில் குடிநீருக்காக திறந்து விட உள்ளனர்.