திருவள்ளூரில் தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி லாக்கரை உடைக்க முடியாததால் 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் தப்பியது
திருவள்ளூரில் தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. லாக்கரை உடைக்க முடியாததால் 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் தப்பியது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் நகரின் முக்கிய சாலையான ஜே.என்.சாலை கட்டிட முதல் மாடியில் தனியார் நிதிநிறுவனம் இயங்கி வருகிறது. அடகு வைத்த தங்க நகைகளை மீட்டு மறு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் 2 பெண்கள் உள்பட 10 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அந்த நிறுவனத்தினர் திருவள்ளூர் கிளையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த ஒரு வாரத்தில் பெற்ற ரூ.20 லட்சம், ¾ கிலோ தங்க நகைகளை சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். மாலையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை அங்குள்ள லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு சென்றனர்.
நேற்று காலை ஊழியர்கள் வந்து பார்த்தபோது தனியார் நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
லாக்கரை உடைக்க முயற்சி
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், நேற்று முன்தினம் இரவு 2 மணி அளவில் அந்த நிறுவனத்தின் பூட்டை உடைத்த முகமூடி அணிந்த நபர் உள்ளே சென்று லாக்கரை உடைக்க முயற்சி செய்வது பதிவாகி இருந்தது.
மேலும் அவர் கையில் உறை அணிந்து கடப்பாரை மற்றும் இரும்பு கம்பிகளை கொண்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த லாக்கரை உடைக்க முயன்றுள்ளார். அந்த லாக்கரை உடைக்க முடியாததை தொடர்ந்து அவர் தப்பிச் சென்று விட்டார்.
இதனால் அந்த லாக்கரில் இருந்த நகை, பணம் தப்பியது. இதுகுறித்து நிதி நிறுவனத்தின் கிளை மேலாளர் ஜெகன் திருவள்ளூர் டவுண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நிதி நிறுவனத்திற்கு வந்து அங்கு ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்து சென்றனர்.