அரசு பள்ளியில் சேர்க்கையை அதிகரிக்க மாணவர்கள் வந்து செல்ல ஆட்டோ வசதி செய்து கொடுத்த தன்னார்வலர்கள்
அரசு பள்ளியில், சேர்க்கையை அதிகரிக்க மாணவர்கள் வந்து செல்ல வதியாக ஆட்டோ வசதியை தன்னார்வலர்கள் செய்து கொடுத்துள்ளனர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள பனங்புளம் வடக்கு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி திறப்பு விழாவில் தங்கத்தால் செய்யப்பட்ட சாவியை கொண்டு திறப்பு விழா செய்யப்பட்ட அரசு பள்ளி என்ற பெருமை உள்ளது. இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பள்ளி நிர்வாகத்துடன் பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் கிராம மக்களின் ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார உதவிகளுடன் பல்வேறு சிறப்புகளை செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு சேர்க்கை உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், அங்கன்வாடியுடன் இணைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அதில் பனங்குளம் வடக்கு நடுநிலைப் பள்ளியும் உள்ளதால் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல மாணவர்களை சேர்த்துள்ளனர்.
மேலும் பல குழந்தைகளை சேர்க்க முன்வந்த பெற்றோர்கள், சின்னக் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வர வாகன வசதி இல்லை. தினசரி கூலி வேலைக்கு செல்வதால் பெற்றோர்களாலும் பள்ளிக்கு அழைத்து வந்து அழைத்துச் செல்வது சிரமமாக இருக்கும் என்று கூறினர். இதையடுத்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் சில தன்னார்வலர்கள் முன் வந்து குழந்தைகளை பள்ளியில் விடவும், மாலை வீட்டிற்கு அழைத்து வந்து விடவும் இலவசமாக ஆட்டோ இயக்கப்படும் என்று பெற்றோர்களிடம் கூறி சேர்க்கையை அதிகரித்து ஆட்டோவில் குழந்தைகளை ஏற்றி சென்று வருகின்றனர். இதனால் மேலும் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக பள்ளி தரப்பில் கூறப்படுகிறது.
கீரமங்கலம், கொத்தமங்கலம் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க இளைஞர்கள், பொதுமக்கள் போட்டி போட்டு பல்வேறு நலப்பணிகள் செய்து வருவதால் அரசுப் பள்ளிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.