ஊத்தங்கரை அருகே வாகனம் மோதி விவசாயி சாவு நண்பர் படுகாயம்
ஊத்தங்கரை அருகே வாகனம் மோதி விவசாயி உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கீழ்குப்பத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55). விவசாயி. இவருடைய நண்பர் பார்த்திபன் (49). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ஒரே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அனுமன்தீர்த்தம் முனியப்பன் கோவில் அருகில் மோட்டார்சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் தூக்கி வீசப்பட்ட விவசாயி பழனிசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பார்த்திபனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அந்த வழியாக வந்தர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.