மாரடைப்பால் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்
மாரடைப்பால் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.;
வரதராஜன்பேட்டை,
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கீழநெடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 42). இவர் ராணுவத்தில் சேர்ந்து கடந்த 22 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இவர் உத்தரபிரதேசம் மாநிலம் பமினாவில் உள்ள ராணுவ முகாமில் சுபேதராக பணியாற்றி வந்தார். கடந்த 30-ந் தேதி ஜெயக்குமார் பணியில் இருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள மிலிட்டரி மருத்துவமனையில் ராணுவ வீரர்கள் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயக்குமார் கடந்த 5-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சொந்த ஊரான கீழநெடுவாய் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் நேற்று காலையில் கொண்டு வரப்பட்டது. பின்னர் ஜெயக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மேல் தேசிய கொடி போர்த்தப்பட்டு மரியாதை செய்யப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது பொதுமக்கள், திருச்சி ராணுவத்தில் இருந்து 2 வீரர்களும், ஜெயக்குமாருடன் பணியாற்றும் 7 ராணுவ வீரர்களும், முன்னாள் ராணுவ வீரர்களும், ஜெயங்கொண்டம் போலீஸ் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் கென்னடி தலைமையிலான போலீசாரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஜெயக்குமாரின் உடலை ராணுவ வீரர்கள் சுமந்து சென்று, நல்லடக்கம் செய்தனர்.