காரிமங்கலம் அருகே முட்புதரில் அழுகிய நிலையில் பெண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
காரிமங்கலம் அருகே முட்புதரில் முகம் சிதைந்து அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கிருஷ்ணகிரி சாலையில் உள்ள டி-குண்டு அருகே கும்பாரஅள்ளிக்கு செல்லும் சாலையோரம் முட்புதரில் நேற்று காலை அழுகிய நிலையில் பெண் ஒருவர் முகம் சிதைந்து பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கும்பாரஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் பூவரசனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அவர் சம்பவ இடம் வந்து பார்வையிட்டு, காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது பிணமாக கிடந்த அந்த பெண் மாநிறமும், சுமார் 30 வயது மதிக்கத்தக்கவராகவும் இருந்தார். மேலும் அவரது உடல் அழுகிய நிலையிலும் முகம் சிதைந்த நிலையிலும் காணப்பட்டது. மேலும் இறந்து கிடந்த அந்த பெண்ணின் 2 கை விரலில் 2 தங்க மோதிரமும், 2 காதிலும் தங்கத்தோடும் அணிந்திருந்தார். இதையடுத்து போலீசார், தடவியல் நிபுணர்களை வரவழைத்து பெண்ணின் உடைகள் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆனால் பிணமாக கிடந்த அந்த பெண் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்த பெண்ணை யாராவது அடித்து கொலை செய்து உடலை முட்புதரில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோரம் முட்புதரில் முகம் சிதைந்து அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்த சம்பவம் காரிமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.