முனியப்பன் கோவில் விழா நடத்துவதில் பிரச்சினை கலெக்டர் அலுவலகத்தில் 4 கிராம மக்கள் மனு

முனியப்பன் கோவில் விழா நடத்துவது தொடர்பாக ஒரு தரப்பினர் பிரச்சினை செய்து வருவதாக 4 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.;

Update: 2019-06-07 21:30 GMT
கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள வெள்ளரம்பட்டி, மாணிக்கனூர், ஆத்தோரத்தான் கொட்டாய், கொட்டாவூர் ஆகிய கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் கிராம மக்கள் பல ஆண்டுகளாக வெள்ளரம்பட்டி கிராமத்தில் உள்ள கச்சேரி முனியப்பன் என்னும் சாமியை வழிபட்டு வருகிறோம். மேலும் விழாக்கள் நடத்தி வருகிறோம்.

இந்த நிலையில் கோவிலுக்கு சம்பந்தமில்லாத பக்கத்து ஊரை சேர்ந்த ஒருவர், தான் கும்பாபிஷேக விழாவை நடத்தவதாக கூறியதால் பிரச்சினை எழுந்தது. இதனால் காவேரிப்பட்டணம் போலீசில் அவர் புகார் செய்தார். பின்னர் உதவி கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பல முறை இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் எதிர் தரப்பை சேர்ந்த சிலர் நீதிமன்றம் சென்றனர். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை தவறாக புரிந்து காவல் துறையினர் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளனர். தற்போது இதனால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

வருகிற 13-ந் தேதி எங்கள் ஊரில் உள்ள கச்சேரி முனியப்பன் கோவில் கும்பாபிஷேக திருவிழாவை எங்கள் ஊக்கு தொடர்பு இல்லாத நபர்கள் தலைமை தாங்கி நடத்தினால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே காவல் துறை சார்பில் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்று இந்த பிரச்சினை தொடர்பாக உதவி கலெக்டர் தலைமையில் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்