வலிப்பு நோயால் பலியான சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் உறவினர்கள் சாலை மறியல்

திண்டுக்கல் அருகே வலிப்பு நோயால் பலியான சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-07 23:30 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் அருகே உள்ள பிள்ளையார்நத்தத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி அஞ்சுகம். இவர்களுடைய மகள் புவனா (வயது 11). இவள் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். இவளுக்கு நேற்று முன்தினம் இரவு வலிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவளை பெற்றோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.

அங்கு புவனாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று மாணவியின் உடலை பெற்றோர் கேட்டுள்ளனர். ஆனால் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னர் தான் தர முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே பள்ளி மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்து தருவதில் காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் தரவேண்டும் என்று பிள்ளையார்நத்தம் பொதுமக்கள் கூறினர். அவ்வாறு இல்லையெனில் உடலை வாங்க மாட்டோம் என்று கூறினர்.

இந்தநிலையில் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் தருவதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அவர்கள் திண்டுக்கல்-திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த திண்டுக்கல் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் ஒரு மணி நேரத்தில் பள்ளி மாணவியின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்