ராஜாக்கமங்கலம் அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு காண்டிராக்டர் உள்பட 2 பேர் மீது வழக்கு

ராஜாக்கமங்கலம் அருகே கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-06-07 22:00 GMT
ராஜாக்கமங்கலம்,

குளச்சல் அருகே ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32), கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று காண்டிராக்டர் விஜயன், ரெத்தினம் ஆகிய 2 பேர் ராஜேசை ராஜாக்கமங்கலம் அருகே பரமன்விளையில் உள்ள ஒரு வீட்டிற்கு கட்டிட வேலைக்காக அழைத்து வந்தனர்.

இந்தநிலையில் வீட்டின் மாடியில் ஏறியபோது திடீரென நிலைதடுமாறி ராஜேஷ் கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவரை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக இறந்தார். பின்னர், இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ராஜேசுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்காததால் தான் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் விஜயன், ரெத்தினம் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்