உலக உணவு பாதுகாப்பு தினம்: பொருட்கள் வாங்கும் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

பொருட்களை வாங்கும் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று உலக உணவு பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவுரை கூறினார்.

Update: 2019-06-07 23:00 GMT
கன்னியாகுமரி,

உணவு பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்துறை சார்பில் உலக உணவு பாதுகாப்பு தினம் கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பெருமாள்புரம் டாக்டர் குமாரசாமி நலவாழ்வு மைய செவிலியர் பயிற்சி நிறுவனத்தில் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் சுபலா வரவேற்றார். அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவீன்ரகு உறுதிமொழி வாசித்தார். விழாவை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உணவு பாதுகாப்பு நம் ஒவ்வொருவருடைய பொறுப்பு ஆகும். உணவு விஷயத்தில் அரசு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பொறுப்பு உள்ளது. இதில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

கடையில் இருந்து ஒரு பொருளை வாங்கும் முன்பு அது எங்கு தயாரானது, தயாரிக்கபட்ட நாள், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை பார்த்து வாங்க வேண்டும். பாதுகாப்பான உணவா, சத்தான உணவா என்று பொதுமக்கள் பார்த்து வாங்க வேண்டும். ஓட்டல்களின் முன்பக்க தோற்றம் நன்றாக இருந்தாலும் சமையலறை சுத்தமாகவும், பாதுகாப்பு இன்றியும் உள்ளது. பழைய காலங்களில் பொதுமக்கள் எப்போதாவது தான் ஓட்டலில் சென்று சாப்பிடும் பழக்கம் இருந்தது.

தற்போது, அடிக்கடி ஓட்டலுக்கு சென்று சாப்பிடும் நிலை மாறி வருகிறது. வீட்டில் பெண்கள் சமையல் செய்யும் போது சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் இருந்தது. இதனால் உடல் நலம் பாதுகாக்கப்பட்டது. ஆனால் கடைகளில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதில்லை. இதை அரசு அதிகாரிகளும் தொடர்ந்து கவனிக்க முடியாது. இதில் பொதுமக்களும், மாணவர்களும் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த வடநேரே பேசினார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே பரிசுகளை வழங்கினார்.

மேலும் செய்திகள்