பல்லி இறந்து கிடந்த குளிர்பானம் குடித்த தாய்-2 மகள்கள் மயக்கம்
மூலைக்கரைப்பட்டி அருகே பல்லி இறந்து கிடந்த குளிர்பானத்தை குடித்த தாய்-2 மகள்கள் மயக்கம் அடைந்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கூந்தன்குளம் நாடார் குடியிருப்பை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 34), பொக்லைன் எந்திர டிரைவர். இவருடைய மனைவி முத்துலட்சுமி (29). இவர்களுடைய மகள்கள் பெபினா (7), பிருந்தா (5). இதில் பெபினா மூலைக்கரைப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பும், பிருந்தா அதே பள்ளிக்கூடத்தில் யு.கே.ஜி.யும் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முத்துலட்சுமி நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் குளிர்பானம் வாங்கினார். பின்னர் அதனை வீட்டிற்கு கொண்டு வந்து, குடித்தார். மேலும் தனது 2 மகள்களுக்கும் குடிக்க கொடுத்தார். பிருந்தா குளிர்பானத்தை குடித்தபோது அந்த பாட்டிலில் ஏதே பூச்சி கிடப்பதாக முத்துலட்சுமியிடம் கூறி உள்ளார். உடனே அவர் அந்த பாட்டிலை வாங்கி பார்த்தபோது அதில் பல்லி ஒன்று இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதற்கிடையே பெபினாவும், பிருந்தாவும் திடீரென மயங்கி விழுந்தனர். முத்துலட்சுமிக்கும் லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே முத்துலட்சுமி இதுகுறித்து மாரியப்பனிடம் தெரிவித்தார். அவர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முனைஞ்சிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.