அவினாசி அருகே பரபரப்பு புதுமனை புகுவிழா வீட்டின் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி 4 பேர் மீது வழக்கு

அவினாசி அருகே புதுமனை புகுவிழா வீட்டின் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2019-06-06 22:56 GMT
அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூரை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது 45). இவர் அழகாபுரி நகரில் வீடு கட்டி உள்ளார். இவரது வீட்டை சிறுபூலுவப்பட்டி சேர்ந்த சுந்தரமூர்த்தி(39) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டி கொடுத்தார். இதை தொடர்ந்து அந்த வீட்டின் புதுமனை புகுவிழாவுக்கான ஏற்பாடுகளை கருப்பசாமியும், அவரது மனைவி சத்யாவும் ஏற்பாடு செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சுந்தரமூர்த்தி, தனது மனைவி ராதா, மற்றும் மகன், உறவினர்களுடன் அழகாபுரி வந்தார். அங்கு கருப்பசாமிக்கு புதிதாக தான் கட்டி கொடுத்த வீட்டின் முன்பு தனது மனைவியுடன் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது வீட்டு உரிமையாளர் கருப்பசாமி, ஒப்பந்ததாரரிடம் வந்து ஏன் புதுமனை புகுவிழா நடத்த வேண்டிய நேரத்தில் வந்து தகராறு செய்கிறீர்கள்? என்று கேட்டு உள்ளார். அதற்கு சுந்தரமூர்த்தி, தனக்கு இன்னும் பணம் தர வேண்டி உள்ளது. அந்த பணத்தை கொடுத்தால் தான் இங்கிருந்து செல்வேன் என்று கூறி இருக்கிறார். தான் ஏற்கனவே ஒப்பந்தப்படி பணம் முழுவதையும் கொடுத்து விட்டேன். இப்போது வந்து தகராறு செய்வது நியாயமில்லை என்று கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் கள்.

பின்னர் திடீரென்று அவர்கள் தங்கள் பையில் இருந்த கேனை திறந்து அதில் இருந்த மண்எண்ணெயை இருவரும் தலையில் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றனர். திடீரென்று இவர்கள் இப்படி நடந்து கொண்டதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் கையில் இருந்த மண்எண்ணெய் கேனை தட்டி விட்டனர். பின்னர் அருகில் உள்ள வீட்டில் இருந்து குடங்களில் இருந்த தண்ணீரை கொண்டு வந்து அவர்கள் 2 பேரின் மீதும் ஊற்றினார்கள். அவர்களை அங்கிருந்து போலீசார் அகற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் நகர மறுத்து விட்டனர்.

இதையடுத்து இந்த பிரச்சினை குறித்து போலீஸ் நிலையத்தில் பேசி தீர்த்து கொள்ளலாம் என்று கூறி இருதரப்பினரையும் அங்கு அழைத்தனர்.

இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது வீட்டு உரிமையாளர், வீடு கட்டியதற்கான பணம் முழுவதையும் ஒப்பந்ததாரரிடம் கொடுத்து விட்டதாக தெரிவித்தார். ஒப்பந்ததாரர் தனக்கு இன்னும் பணம் தர வேண்டியது இருக்கிறது என்று கூறினார்.

பின்னர் புதிதாக வீடு புதுமனை புகுவிழா நடைபெறும் இடத்திற்கு சென்று தகராறு செய்து வீட்டு உரிமையாளரின் மனைவி சத்யாவை கையால் தாக்கியதாக ஒப்பந்தாரர் சுந்தரமூர்த்தி, அவருடைய மனைவி ராதா, உறவினர்கள் சந்தோ‌‌ஷ், மனோ ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து உள்ளனர். தொடந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்