சத்தி அருகே சாலையில் சுற்றித்திரியும் யானைகள் வாகனஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

சத்தியமங்கலம் அருகே சாலையில் யானைகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-06-06 22:37 GMT
தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர்மாளம் ஆகிய வனச்சரகங்களில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. காடுகளில் நீர்நிலைகள் வறண்டதால் யானைகள் தண்ணீரைத்தேடி வனப்பகுதிக்குள் இருந்து அடிக்கடி வெளியே வருகின்றன.

இந்த யானைகள் ஆசனூர்-மைசூர்தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.

அதேபோல்நேற்று குட்டியுடன் யானைகள் கூட்டம் கூட்டமாக ஆசனூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தன. பின்னர் சாலையோரத்தில் உள்ள மூங்கில் கிளைகளை துதிக்கையால் ஒடித்து தின்றன.

இதை அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் பார்த்து ரசித்தனர். சிலர் தங்கள் செல்போன்களில் படம் எடுத்து மகிழ்ந்தனர். சாலையில் யானைகள் சுற்றித்திரிந்ததால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. சிறிது நேரம் கழித்து யானைகள் ரோட்டை விட்டு வனப்பகுதிக்குள் சென்ற பிறகே வாகனங்கள் சென்றன.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘ஆசனூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் தமிழகம்-கர்நாடக மாநிலங்கள் இடையே பயணிக்கும் வாகனங்கள் ஆசனூர் சாலை வழியாக செல்லும் போது 30 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டும்.

மேலும் யானைகள் சாலையோரம் நிற்பதால் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்ல வேண்டாம். பகல் நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும்’ என்றனர்.

மேலும் செய்திகள்