நாக்பூரில் 117 டிகிரி வெயில் 12 பேர் சுருண்டு விழுந்து சாவு
நாக்பூரில் நேற்று 117 டிகிரி வெயில் கொளுத்தியது. இதில் வெப்பம் தாங்கமுடியாமல்12 பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.
நாக்பூர்,
மராட்டியத்தில் பல மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக விதர்பா மண்டலத்தில் இந்த கொடூரம் உச்சக்கட்டத்தில் உள்ளது. அதற்கு ஏற்றாற்போல் வெயிலும் மக்களை வறுத்து எடுத்து வருகிறது.
விதர்பா மண்டலத்தில் உள்ள நாக்பூரில் நேற்று 116.98 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்த கோடைக்காலத்தில் நாக்பூரில் நேற்று மூன்றாவது முறையாக வெயில் 116 டிகிரியை தாண்டி அடித்தது.
12 பேர் சாவு
வெயிலின் தாக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாக்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்து உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சாலையோரம் வசித்து வந்தவர்கள் ஆவர். அவர்களது அடையாளங்களை காண போலீசர் முயன்று வருகின்றனர்.
மராட்டியத்தில் அதிகப்பட்சமாக சந்திராப்பூர் மாவட்டம் பிரமபுரியில் நேற்று 117.5 டிகிரி வெயில் கொளுத்தியது குறிப்பிடத்தக்கது.