ஒரே வாரத்தில் 2-வது தடவையாக பிரக்யா சிங் எம்.பி. கோர்ட்டில் ஆஜராகவில்லை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதாக தகவல்
ஒரே வாரத்தில் 2-வது தடவையாக பிரக்யா சிங் எம்.பி. கோர்ட்டில் ஆஜராகவில்லை. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.;
மும்பை,
சர்ச்சைக்குரிய பெண் சாமியாரும், போபால் தொகுதி பா.ஜனதா எம்.பி.யுமான பிரக்யா சிங் தாக்குர், 2008-ம் ஆண்டு மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
அவர் உள்ளிட்ட 7 பேரும் வாரம் ஒரு தடவையாவது கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த மே மாதம் கோர்ட்டு கூறியிருந்தது.
ஆஜராகவில்லை
ஆனால், கடந்த திங்கட்கிழமை விசாரணையின்போது, பிரக்யா சிங் கோர்ட்டில் ஆஜராகவில்லை. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 2-வது தடவையாக அவர் ஆஜராகவில்லை.
பிரக்யா சிங் சார்பில் ஆஜரான அவருடைய வக்கீல் பிரசாந்த், பிரக்யா சிங் வயிற்றுக்கோளாறு காரணமாக போபாலில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரால் பயணம் செய்ய முடியாது என்றும் கூறினார்.
எச்சரிக்கை
அதற்கு நீதிபதி பாடல்கர், ‘‘இன்று (நேற்று) ஒருநாள் மட்டும் அவருக்கு விலக்கு அளிக்கிறேன். வெள்ளிக்கிழமை (இன்று) அவர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ என்று எச்சரித்தார்.