சட்டசபை தேர்தல் குறித்து காங்கிரஸ் ஆலோசனை இன்றும், நாளையும் நடக்கிறது
மராட்டிய சட்டசபை தேர்தல் குறித்த காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது.
மும்பை,
மராட்டிய சட்டசபைக்கு கடந்த தடவை (2014) நடந்த தேர்தலின் போது பா.ஜனதா 122 இடங்களையும், சிவசேனா 63 இடங்களையும் பிடித்தது. காங்கிரஸ் 42 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து, ஒரு தொகுதியை மட்டும் கைப்பற்ற முடிந்தது.
இந்த நிலையில் வரும் செப்டம்பர்-அக்டோபர் வாக்கில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா? சாவா? பிரச்சினையாக உள்ளது.
முன்னேற்பாடு குறித்து...
எனவே சட்டமன்ற தேர்தல் ஆயத்த பணியை இப்போதே முடுக்கி விட்டு உள்ளது. தேர்தல் முன்னேற்பாடு குறித்து இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) மாவட்ட வாரியாக ஆய்வு நடத்த உள்ளது.
இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், மராட்டிய காங்கிரஸ் பொறுப்பாளருமான மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் தெரிவித்தார்.