அரசு ஊழியர்களுக்கு 4-வது சனிக்கிழமை விடுமுறை கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

கர்நாடகத்தில் அரசு ஊழியர்களுக்கு மாதத்தில் 4-வது சனிக்கிழமை விடுமுறை அளிக்கவும், கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் உள்ள 126 ஏரிகளில் சுத்திகரிக்கப்பட்ட நீரை நிரப்ப ரூ.1,280 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2019-06-06 23:00 GMT
பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.

கலந்தாய்வு முறை

கூட்டத்தில் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக அரசில் பணியாற்றி வரும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் பணி இடமாற்றத்தில் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அவற்றுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் கலந்தாய்வு முறையில் பணி இடமாற்றம் செய்வது என்று மந்திரிசபையில் தீர்மானிக்கப்பட்டது. எத்தனை ஆண்டுகள் பணியாற்றினர் என்பது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். சட்டமன்ற கூட்டத்தில் இதற்கான சட்டம் நிறைவேற்றப் படும்.

4-வது சனிக்கிழமை விடுமுறை

அரசு ஊழியர்களுக்கு தற்போது மாதத்தில் 2-வது சனிக்கிழமை அரசு விடுமுறை அமலில் இருக்கிறது. அத்துடன் 4-வது சனிக்கிழமையும் விடுமுறை அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதை ஈடுகட்டும் நோக்கத்தில் இதர பொதுவிடுமுறைகள் 15 நாட்களில் இருந்து 10 நாட்களாக குறைக்கப்படும். இதில் தலைவர்களின் ஜெயந்தி அல்லது பண்டிகை விடுமுறைகளை குறைக்கும் திட்டம் இல்லை.

1998-ம் ஆண்டு கே.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களில் சிலருக்கு பணி பாதுகாப்பு கிடைக்காத நிலை உள்ளது. அவர்களின் நலனை கருதி, அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் 1998-ம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கும்படி தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

250 ஏரிகளை நிரப்ப...

கொப்பல் மருத்துவ அறிவியல் வளாகத்தில் 450 படுக்கை வசதி கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு கூடுதல் கட்டுமான பணிகளுக்காக ரூ.104 கோடி நிதி ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் 126 ஏரிகளில் சுத்திகரிக்கப்பட்ட நீரை நிரப்ப ரூ.1,280 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் 2-வது கட்டமாக 250 ஏரிகளை நிரப்ப ரூ.455 கோடி ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் மாநிலத்தில் மொத்தம் 18 ஆயிரத்து 582 பாதுகாக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 16 ஆயிரம் மையங்களின் பராமரிப்பு ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டது. அந்த மையங்களை சரியான முறையில் பராமரிக்க ஒரு தாலுகாவுக்கு ஒரு நிறுவனம் என்ற அளவில் டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரம் கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பிரச்சினைகள்

தற்போது இந்த பாதுகாக்கப்பட்ட குடிநீர் மையத்தில் ஒரு லிட்டர் நீர் 10 பைசாவுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் அவற்றின் பராமரிப்பு செலவு லிட்டருக்கு 25 பைசா ஆகிறது. இதையடுத்து லிட்டர் 25 பைசாவாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் மையங்களில் நாணயங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. அதில் சில தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகள் வருகின்றன.

அதனால் அவற்றை மாற்றிவிட்டு ‘ஸ்மார்ட் கார்டு‘ திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.223.73 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. உயர்கல்வித்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். அவர் கள் பணி ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.

மேலும் செய்திகள்