மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாது ஐகோர்ட்டு உத்தரவு

மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.;

Update: 2019-06-06 23:15 GMT
சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிடக்கோரி மயிலாப்பூரை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதற்கு அரசியல் கட்சிகள், சங்கங்கள், சில அமைப்புகள் மெரினா கடற்கரையை தேர்வு செய்கின்றன.

இவ்வாறு நடத்தப்படும் போராட்டங்களால் போக்குவரத்து மட்டுமல்லாமல், சுற்றுலா வருபவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை தீவிரமாக பின்பற்ற போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். பின்னர், ‘மெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்களை மனுதாரர் தாக்கல் செய்யாததால், வழக்கை தள்ளுபடி செய்கிறோம். அதேநேரம், மெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்கூடாது. இதுதொடர்பாக தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ந் தேதி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை போலீசார் தீவிரமாக பின்பற்ற வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்