கார் மீது லாரி மோதல்: விபத்தில் காயமடைந்த கர்ப்பிணி சாவு
திருவண்டார்கோவிலில் கார் மீது லாரி மோதிய விபத்தில் காயமடைந்த கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனார்.
வில்லியனூர்,
திருவண்ணாமலையை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 30). இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த பெஸ்ருதீன் (27) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியான பெஸ்ருதீன் பிரசவத்துக்காக தாய் வீட்டில் இருந்து வந்தார்.
மனைவியை பார்க்க கடந்த வாரம் பிரவீன்குமார் மாமியார் வீட்டுக்கு வந்திருந்தார். கடந்த 30-ந் தேதி இரவு பெஸ்ருதீனுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு பிரவீன்குமார் காரில் அழைத்துச்சென்றார். அவர்களுடன் உறவினர்கள் ஆண்டனி பிலீப், சகாயமேரி, புஷ்பரேகா ஆகியோரும் வந்தனர்.
விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் திருவண்டார்கோவிலில் வந்தபோது, புதுவையில் இருந்து மதகடிப்பட்டு நோக்கி சென்ற லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. இதில் காரில் சென்ற கர்ப்பிணி பெஸ்ருதீன், பிரவீன்குமார் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப்பெற்று வந்தனர். விபத்து நடந்த அன்று இரவே பெஸ்ருதீன் வயிற்றில் இருந்த சிசு இறந்துபோனது. மறுநாள் சகாயமேரி உயிரிழந்தார்.
இந்த நிலையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பெஸ்ரூதீன், பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்துபோனார். இதனால் இந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
விபத்து தொடர்பாக வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.