புதுவண்ணாரப்பேட்டையில் குடிநீர் கேட்டு 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் குடிநீர் கேட்டு 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பூர்,
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெரு, நாகூரான் தோட்டம், வரதப்பா மேஸ்திரி தெரு ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யாமல், மாநகராட்சி தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
ஆனால் கடந்த சில நாட்களாக தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்வதும் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் தண்ணீர்இன்றி அந்தபகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் நேற்று திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்
காலி குடங்களுடன்...
இதேபோல் புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர், தேசிய நகர், அசோக் நகர் ஆகிய பகுதிகளிலும் குடிநீர் லாரிகள் மூலம் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் கையில் காலிக்குடங்களுடன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூரிய நாராயணன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
மேலும் புதுவண்ணாரப்பேட்டை வீரராகவன் தெரு, வெங்கடேஸ்வரா தெரு, அலி தெரு, இருசப்ப மேஸ்திரி தெரு, சுடலைமுத்து தெரு பகுதிகளிலும் தண்ணீர் சரியாக வினியோகம் செய்யவில்லை எனக்கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மற்றொரு பகுதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் அடுத்தடுத்து 3 இடங்களில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
மாநகராட்சி குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி முறையாக லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.
அதன்பிறகு அந்த சாலையில் போக்குவரத்து சீரானது. கடுமையான வெயில் என்பதால் வெகு நேரமாக சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.