திருச்சி சிறையில் குடிநீர் கேட்டு அகதிகள் திடீர் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

திருச்சி சிறையில் குடிநீர் கேட்டு அகதிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.;

Update: 2019-06-06 23:15 GMT
திருச்சி,

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான முகாம் சிறை உள்ளது. இந்த முகாம் சிறையில் போலி பாஸ்போர்ட்டில் இந்தியா வந்தவர்கள், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருச்சி சிறப்பு முகாமில் தற்போது வரை இலங்கை தமிழர்கள் 29 பேரும், வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் 15 பேரும், நைஜீரியர்கள் 5 பேரும், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 50 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முகாம் சிறையில் கடந்த 2 நாட்களாக சரிவர குடிநீர் வரவில்லை என தெரிகிறது. இதனை கண்டித்து நேற்று காலை முகாம் சிறைவாசிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சிலர் மரத்தின் மீது ஏறியும், ஒருவர் கயிறு எடுத்து தூக்குபோடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.

பேச்சுவார்த்தை

அவர்களிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். சிறை வளாகத்தில் வாழை மரங்கள் கைதிகளால் வளர்க்கப்படுகிறது. அதற்கு தண்ணீர் விடுவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும், விரைவில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்