சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் தொட்டியில் ஆண் பிணம்

மதுராந்தகம் அருகே சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் தொட்டியில் ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-06-06 22:00 GMT
சென்னை,

வீராணம் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் மூலம் சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆங்காங்கே குழாயில் 20 அடி ஆழ நீர்தேக்கத்தொட்டி பராமரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. மதுராந்தகத்தை அடுத்த வீராணங்குன்னம் என்ற இடத்தில் குழாயில் மேல் உள்ள நீர்த்தேக்கத்தொட்டியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் வந்தது.

கொலையா?

அதன் பேரில் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்தார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் தொட்டியில் வாலிபர் பிணமாக மிதந்தது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்