மக்கள் குறைகள் அனைத்தும் 2 வருடங்களில் சரிசெய்யப்படும் சதன் பிரபாகர் எம்.எல்.ஏ. பேட்டி
பரமக்குடி தொகுதியில் மக்கள் குறைகள் அனைத்தும் 2 வருடங்களில் சரிசெய்யப்படும் என்று சதன் பிரபாகர் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
நயினார்கோவில்,
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் பகுதியில் நன்றி தெரிவித்து மக்களின் குறைகளை கேட்க சதன் பிரபாகர் எம்.எல்.ஏ. 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நயினார்கோவில் பகுதியில் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து துரித நடவடிக்கை மேற்கொள்வேன். ஆழ்குழாய் அமைத்தல், காவிரி கூட்டுக் குடிநீர் முறையாக வழங்குதல் போன்ற அடிப்படையில் தண்ணீர் பிரச்சினையை சரிசெய்வேன். வரத்து கால்வாய்களை தூர்வாரி நீர்நிலைகளை நிரப்புவேன்.
கிராமங்கள்தோறும் மாணவர்கள், வயதானவர்கள் பயன்படுத்தும் அரசு பஸ்களை விரிவுபடுத்துவேன்.
பரமக்குடியில் எந்த சட்டமன்ற உறுப்பினரும் செய்யாத சாதனைகளை செய்து காட்டுவேன். மக்களின் குறைகள் அனைத்தும் 2 வருடத்தில் சரிசெய்யப்படும். குறிப்பாக நயினார்கோவில் மக்களுக்கு என்றும் நன்றிக்கடன்பட்டுள் ளேன். வாக்கு எண்ணிக்கையின் போது ஆரம்ப நேரத்தில் பெரிதும் அச்சத்தில் இருந்தேன்.
நயினார்கோவில் பகுதி மக்கள் எனது வெற்றியை உறுதிசெய்தனர். என்றைக்குமே நயினார்கோவில் பகுதி அ.தி.மு.க.வின் கோட்டை என்று நிரூபித்துவிட்டீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது ஒன்றிய செயலாளர் குப்புசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் நவநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரஜினிகாந்த், மாவட்ட இலக்கிய அணி தலைவர் நல்லதம்பி, கூட்டுறவு சங்க தலைவர்கள் மேமங்கலம் துரைசிங்கம், வல்லம் துரைசிங்கம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் வினோத், இணை செயலாளர் சோலைமுருகன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கரிகாலன், ஒன்றிய மாணவரணி செயலாளர் சத்தியேந்திரன், ஊராட்சி செயலர்கள் வணியவல்லம் நாகநாதன், பாண்டியூர் முத்துராமலிங்கம், நயினார்கோவில் ராஜ்குமார் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.