ஊட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த கடமான் மீட்பு

ஊட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த கடமான் உயிருடன் மீட்கப்பட்டது.;

Update: 2019-06-06 22:15 GMT
ஊட்டி,

ஊட்டி காந்தல் பகுதியில் பழைய மைசூரு சாலை உள்ளது. இந்த சாலையையொட்டி உள்ள அடர்ந்த வனப்பகுதியில் காட்டெருமை, கடமான், சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வந்து வனவிலங்குகள் நடமாடுகிறது. காந்தல் குருசடி காலனியில் சுமார் 25 அடி ஆழம் உள்ள கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்று தண்ணீரை மோட்டார் மூலம் எடுத்து விவசாயத்துக்கு அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த கிணற்றை சுற்றிலும் தடுப்புச்சுவரோ அல்லது பாதுகாப்பாக இருப்பதற்காக வலைகளோ அமைக்கப்பட வில்லை.

இந்த நிலையில் நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த பெண் கடமான் ஒன்று எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தது. கிணற்றில் தண்ணீர் இருந்ததால் கடமான் அங்கும், இங்கும் நீந்திக்கொண்டே உயிருக்கு போராடியது. இதனை அந்த வழியாக வந்த பொதுமக்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது கடமான் தவித்து கொண்டே இருந்ததை கண்டனர். பின்னர் கயிறு கட்டி கடமானை மீட்கும் முயற்சியில் ஈடுபட் டனர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. அதனை தொடர்ந்து கிணற்றுக்குள் கயிற்றால் ஆன வலையை வீசி, அதில் கடமானை சிக்க வைத்து மேலே இழுத்து பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட பெண் கடமான் சிறிது நேரத்தில் துள்ளி எழுந்து, வனப்பகுதியை நோக்கி ஓடியது.

அந்த கிணற்று தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலையில் மிகவும் மோசமாக உள்ளது. அதனை சுற்றிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் மீண்டும் ஏதேனும் வனவிலங்குகள் கிணற்றில் தவறி விழ வாய்ப்பு உள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்தனர். கடமானை 2½ மணி நேரம் போராடி வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஊழியர்கள் பொதுமக்கள் உதவியுடன் மீட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்