சத்துவாச்சாரியில் வீடுகளில் ரூ.20 லட்சம் கொள்ளை: விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை
சத்துவாச்சாரியில் வீடுகளில் ரூ.20 லட்சம் கொள்ளைபோனதை அடுத்து குற்றவாளிகளை பிடிக்க தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
வேலூர்,
வேலூர் சத்துவாச்சாரியில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மார்க்கபந்துவின் மகன்கள் எழில்மாறன், புகழேந்தி ஆகியோர் வீடுகளிலும், வள்ளலார் 6 வழிச்சாலையில் உள்ள டாக்டரான அப்பு என்பவரின் வீட்டிலும், தொழில் அதிபர் ஜெகநாதன் வீட்டிலும் மர்ம நபர்கள் ஜன்னலை உடைத்து ரூ.20 லட்சம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். இதுகுறித்து அவர்கள் தனித்தனியே சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொள்ளை நடந்த தொழில் அதிபர் வீடு உள்பட மற்ற 3 வீடுகளிலும் ஒரே கும்பலை சேர்ந்த மர்ம நபர்கள் தான் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பதும், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்க வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் (பொறுப்பு) தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தவர்கள் என்பதால் வேலூர், சத்துவாச்சாரி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கியிருக்க வாய்ப்பு உள்ளதால் நேற்று ேபாலீசார் அதிரடியாக சோதனை செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
வீடுகளில் திருடியவர்கள், தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கலாம் என்று கருதி, காந்திபஜார், சலவன்பேட்டை, சைதாப்பேட்டை, வேலூர், சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தி வருகிறோம்.
மேலும் அறைகளில் தங்கி உள்ளவர்கள் உரிய ஆவணங்கள் கொடுத்து தங்கி உள்ளார்களா? யாராவது ஆவணங்கள் இன்றி தங்கி உள்ளார்களா? என சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் விடுதிகளில் அறை எடுத்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொள்ளை நடந்த பின்னர் விடுதிகளில் அறையை காலி செய்து விட்டு சென்றவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தங்கும் விடுதிகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, கொள்ளையர்கள் சிக்கிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஒப்பிட்டு பார்க்க உள்ளோம். ஏற்கனவே குற்றவாளிகள் பட்டியலில் உள்ள வடமாநிலத்தவர்கள் குறித்த விவரமும் சேகரிக்கப்படுகிறது. விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.