பள்ளிக்கு செல்லுமாறு தந்தை கண்டித்ததால் மாணவன், விஷம் குடித்து தற்கொலை
ரிஷிவந்தியம் அருகே பள்ளிக்கு செல்லுமாறு தந்தை கண்டித்ததால் மாணவன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் அருகே உள்ள இளையனார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பால்சாமி மகன் முனியன் (வயது 40). இவரது மகன் தனுஷ்(18). முனியன் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். தனுஷ் சென்னையில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளான்.
கோடை விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு முனியன் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து கடந்த 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து முனியன், தனுசை பிளஸ்-1 படிக்க சென்னைக்கு வருமாறு அழைத்தார்.
ஆனால் தனுஷ் தனக்கு படிக்க விருப்பமில்லை, அதனால் சென்னைக்கு வரமாட்டேன் என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முனியன், சென்னைக்கு வந்து பள்ளிக்கு செல்லுமாறு கூறி தனுசை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தனுஷ் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டான்.
இதில் அவன் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவனை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை தனுஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து முனியன், பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு செல்லுமாறு தந்தை கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.