விழுப்புரம் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது
விழுப்புரம் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது.
விழுப்புரம்,
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் 2019-20-ம் கல்வியாண்டிற்கான கலை மற்றும் அறிவியல் பாடங்களுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடந்து வருகிறது.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. பொருளியல், ஆங்கிலம், தமிழ், வரலாறு, பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், உயிரியல், தாவரவியல், மற்றும் பி.காம். உள்ளிட்ட பாடங்களில் சேர 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
அதேபோல் விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேருவதற்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த 2 அரசு கல்லூரிகளிலும் கடந்த 3-ந்தேதி முதல் மாணவ- மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. முதல் நாளான அன்று சிறப்பு ஒதுக்கீடான முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை நடந்தது. அதனை தொடர்ந்து மற்ற மாணவ- மாணவிகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு தற்போது நடந்து வருகிறது. இதில் துறை தலைவர்கள் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளின் மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழை சரிபார்த்து சேர்க்கை நடத்தி வருகின்றனர்.