வெயிலில் இருந்து தப்பிக்க காருக்குள் சென்ற சிறுவன் சாவு மூச்சுத்திணறி பலியான பரிதாபம்

அகோலாவில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக காருக்குள் சென்ற சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2019-06-05 23:14 GMT
அகோலா,

அகோலா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் சிறுவன் ஒருவன் உயிரை வெயில் காவு வாங்கியுள்ளது.

இதுகுறித்த தகவல் வருமாறு:-

அகோலா மாவட்டம் ஆலேவாடி கிராமம் அருகே நேற்று முன் தினம் தனீஷ் பல்லால் என்ற 12 வயது சிறுவன் தனது பாட்டியுடன் பழைய பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பதற்காக சென்று கொண்டு இருந்தான். அப்போது அங்குள்ள புதரில் பழைய கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தேடி அலைந்த பாட்டி

இந்தநிலையில், பாட்டியுடன் வந்திருந்த சிறுவன் தனீஷ் பல்லால் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, நின்றுகொண்டிருந்த அந்த காருக்குள் தஞ்சம் புகுந்தான். ஆனால் துரதிருஷ்டவசமாக சிறுவன் உள்ளே சென்றதும் காரின் கதவு தன்னால் பூட்டிக்கொண்டது. அவன் எவ்வளவு முயன்றும் காரின் கதவை திறக்க முடியவில்லை. இதனால் சிறுவனால் காரை விட்டு வெளியே வர முடியவில்லை. இந்தநிலையில் சிறுவனை காணாமல் அவனது பாட்டி தேடி அலைந்தார்.

இந்த நிலையில் அன்று இரவு அந்த காரின் உரிமையாளர் காரை திறந்து பார்த்தார். அப்போது காருக்குள் சிறுவன் ஒருவன் மூச்சுபேச்சின்றி பிணமாக கிடந்தான். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார் உரிமையாளர் இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமானதாலும், காருக்குள் காற்று இல்லாததாலும் சிறுவன் மூச்சுத்திணறிஉயிரிழந்ததாக கூறப்படுகிறது.

நிழலுக்காக காருக்குள் சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்