லிப்டில் சிக்கி தவித்த சிவசேனா எம்.எல்.ஏ. ½ மணி நேரம் போராடி மீட்கப்பட்டார்
எம்.எல்.ஏ.விடுதியில் லிப்டில் சிக்கி தவித்த சிவசேனா எம்.எல்.ஏ. ½ மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டார்.
மும்பை,
தென்மும்பை நரிமன்பாயிண்டில் எம்.எல்.ஏ.க்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் உள்ள ஒரு லிப்டில், நேற்று முன்தினம் புல்தானா சிவசேனா கட்சி எம்.எல்.ஏ. சசிகாந்த் மற்றும் எம்.எல்.சி. விநாயக் மேத்தேயின் அலுவலக ஊழியர்கள் 2 பேர் 4-வது மாடிக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஆனால் அந்த லிப்ட் நிற்காமல் 6-வது மாடிக்குசென்றது. உடனே அவர்கள் கீழே செல்வதற்காக லிப்டில் உள்ள பொத்தானை அழுத்தினார்கள். ஆனால் லிப்ட் 4-வது மாடியில் நிற்காமல் கீழ் நோக்கி சென்றது.
சிக்கி தவிப்பு
இதனால் லிப்டில் இருந்த 3 பேரும் செய்வதறியாது பொத்தானை அழுத்தி பார்த்தனர். அப்போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு அந்த லிப்ட் நடுவழியில் நின்றது. இதனால் லிப்ட்டின் உள்ளே எம்.எல்.ஏ. சசிகாந்த் உள்பட 3 பேரும் சிக்கி கொண்டனர்.
இது பற்றி அறிந்த விடுதி ஊழியர்கள் பழுதான லிப்ட்டை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், லிப்டுக்குள் சிக்கியிருந்த 3 பேருக்கும் மூச்சுத்திணறல் உண்டானது. இதையடுத்து அரை மணி நேர போராட்டத்துக்கு பின்னர் லிப்ட் கதவு அகற்றப்பட்டு 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.