ரூ.5 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்திய வெளிநாட்டுக்காரர் கைது மும்பை விமான நிலையத்தில் பிடிபட்டார்
மும்பை விமான நிலையத்தில் ரூ.5 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த மாதம் பிரேசிலில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர் போதைப்பொருள் கடத்தி வருவதாக போதை தடுப்பு முகமை பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை செய்தனர். பிரேசிலை சேர்ந்த ஜோனத்தன் பரேரியா (வயது 24) என்ற பயணியிடம் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் சிக்கவில்லை.
எனினும் அவரது உடலில் தெரிந்த மாற்றங்களினால் அதிகாரிகளுக்கு அவர் மீதான சந்தேகம் வலுத்தது.
ரூ.5 கோடி மதிப்பு
இதையடுத்து அதிகாரிகள் அவரை மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று ஸ்கேன் எடுத்தனர். இதில், அவரின் வயிற்றுக்குள் மாத்திரை வடிவில் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்து இருந்தார்.
இதையடுத்து அவரின் வயிற்றுக்குள் இருந்து 75 மாத்திரை வடிவிலான 1 கிலோ எடையுடைய கோகைன் என்ற போதைப்பொருள் வெளியே எடுக்கப்பட்டது. அந்த போதைப்பொருளின் மதிப்பு ரூ.5 கோடி என போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த வெளிநாட்டு வாலிபரை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.