சுற்றுச்சூழல் துறை நகரப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - நாராயணசாமி வலியுறுத்தல்
சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பாக நகரப்பகுதி மக்களுக்கு சுற்றுச்சூழல் துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.
அரியாங்குப்பம்,
புதுச்சேரி அரசு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினவிழா சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் ‘காற்று மாசுவை தவிர்ப்போம்’ என்ற தலைப்பில் நடைபெற்றது.
விழாவிற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி விழா மலரை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அவர், மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்களுக்கு துணிப்பைகளை வழங்கினார். அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்தார். புதுச்சேரி நகர அமைப்பு குழுமத்தலைவர் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–
புதுச்சேரியில் சுற்றுச்சூழலை சரியாக வைத்திருக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். நகரப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் பொதுமக்கள் பிளாஸ்டிக் கப்புகளில் தேநீர் அருந்திவிட்டு அதனை சாக்கடையில் போட்டு செல்கிறார்கள். இதனால் கழிவுநீர் வெளியேற முடியாமல் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதற்கு காரணம் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாதது தான்.
புதுவையில் தேங்கும் குப்பைகளை அகற்றுவதற்காக மாதத்திற்கு ரூ.2 கோடி செலவு செய்கிறோம். நகரப்பகுதி மட்டுமின்றி கிராமப்பகுதியும் சுத்தமாக இருக்க வேண்டும். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு உள்ளது.
புதுவையில் சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால் 4 வாகனங்களை வைத்திருக்கிறார்கள். இந்த வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் மாசு ஏற்படுகிறது.
புதுவையில் ஒரு ஆண்டுக்கு மின்சாரத்திற்காக ரூ.1,300 கோடி வரை செலவு செய்கிறோம். சோலார் பேனல்களை வீடுகளில் பொருத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு 40 சதவீதம் மானியம் வழங்குகிறது. இதன் மூலம் வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து மீதமுள்ள மின்சாரத்தை அரசுக்கு வழங்கலாம்.
சுற்றுச்சூழல் துறை நகரப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும். இதற்காக பல திட்டங்களை உருவாக்க வேண்டும். இதன் மூலம் சுற்றுலாவை வளர்க்க முடியும். மாதம் ஒரு முறை சுற்றுச்சூழல் துறை தனியாருடன் இணைந்து கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக துறை இயக்குனர் ரவிபிரகாஷ் வரவேற்றார். இதில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி மலர், சின்னவீராம்பட்டினம் கிராம பஞ்சாயத்தார்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி, புலியாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. முடிவில் சகாயம் ஆல்பர்ட் நன்றி கூறினார்.