துமகூரு நாடாளுமன்ற தொகுதியில் தேவேகவுடா தோல்விக்கு காரணம் யார்? சித்தராமையா பதில்
துமகூரு நாடாளுமன்ற தொகுதியில் தேவேகவுடா தோல்விக்கு காரணம் யார்? என்ற கேள்விக்கு சித்தராமையா பதிலளித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். கூட்டணி அரசு அமைந்தபோது, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராமலிங்கரெட்டிக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. 6 மாதங்களுக்கு பிறகு அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவருக்கு மந்திரி பதவி வழங்க கோரி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து ராமலிங்கரெட்டியை அழைத்து பேசிய முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரிசபை மாற்றி அமைக்கும்போது, மந்திரி பதவி வழங்குவதாகவும், அதுவரை பொறுமையாக இருக்கும்படியும் கூறினார். இதையடுத்து அவர் அமைதியானார். இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபையில் 3 இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்ப முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவருக்கும் மந்திரி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமலிங்கரெட்டிக்கு மந்திரி பதவி
இந்த நிலையில் ராமலிங்கரெட்டி தற்போது மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளார். மந்திரி பதவி வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார். அவரது ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தினர். இது கூட்டணி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கேள்விக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று பதிலளித்தார். அவர் கூறியதாவது:-
மந்திரிசபையை மாற்றி அமைக்கும்போது, மந்திரி பதவி வழங்குவதாக ராமலிங்கரெட்டிக்கு உறுதியளித்தோம். மந்திரியாக இருந்த சி.எஸ்.சிவள்ளி மரணம் அடைந்ததை அடுத்து காங்கிரசுக்கான ஒதுக்கீட்டில் ஒரு மந்திரி பதவி காலியாக உள்ளது. அந்த ஒரு இடத்தை நிரப்ப உள்ளோம். மந்திரிசபையை மாற்றி அமைக்கும்போது, ராமலிங்கரெட்டிக்கு மந்திரி பதவி வழங்கப்படும். இதுபற்றி ராமலிங்கரெட்டியிடம் பேசுகிறேன்.
தேவேகவுடா தோல்விக்கு...
காங்கிரசில் அடிப்படை காங்கிரசார், வேறு கட்சிகளில் இருந்து வந்த காங்கிரசார் என்ற பேதம் இல்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். எச்.விஸ்வநாத், ரோஷன் பெய்க் ஆகியோரின் விமர்சனங்களுக்கு பதிலளிக்க மாட்டேன். எச்.விஸ்வநாத் எங்கள் கட்சியை சேர்ந்தவர் இல்லை. அதனால் அவரை பற்றி பேசமாட்டேன்.
தேவேகவுடா தோல்விக்கு நான் எப்படி காரணமாக இருக்க முடியும். அவர் எங்கள் கட்சியை சேர்ந்தவர் அல்ல. இதுபற்றி ஜனதா தளம் (எஸ்) கட்சியினரிடம் கேளுங்கள். துமகூருவில் தேவேகவுடாவை அவரது கட்சியினர் நிறுத்தினர். அவருக்கு ஆதரவாக ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் பிரசாரம் மேற்கொண்டனர்.
யார் காரணம்?
நிலைமை இவ்வாறு இருக்க நான் எப்படி காரணமாக முடியும். அப்படி என்றால் மைசூருவில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்சங்கர் தோல்விக்கு யார் காரணம்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.