நாக்கில் தடவினால் போதும் அதிக போதை தரும் ‘எல்.எஸ்.டி. ஸ்டாம்பு’; புதுவையில் சிக்கியவர் போலீசில் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்

புதுவையில் அதிக போதை தரும் ‘எல்.எஸ்.டி. ஸ்டாம்பு’ விற்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update:2019-06-06 04:15 IST

புதுவை,

 சுற்றுலா நகரமான புதுவைக்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் சுற்றுலாவாக வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. இவர்களில் மது பிரியர்கள் அதிகம். சமீப காலமாக சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது புதுவையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு கஞ்சா விற்பவர்களை கைது செய்து வருகின்றனர். ஆனாலும் புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.

போதை பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது எல்.எஸ்.டி. ஸ்டாம்பு என்ற போதைப் பொருளை விற்றவரை போலீசார் கைது செய்தனர். எல்.எஸ்.டி. ஸ்டாம்பு போதை பொருள் வித்தியாசமானது. அதாவது ‘லைசெர்ஜிக் டை எத்திலமைடு’ என்ற வேதிப்பொருளை தண்ணீரில் கரைத்து அதனை சிறிய ஸ்டாம்புகளில் ஊற்றி திடநிலைக்கு மாற்றுகிறார்கள்.

இந்த ஸ்டாம்பை நாக்கில் தடவினால் போதும். அதில் உள்ள வேதிப்பொருள் கரைந்து அதிக போதையை தூண்டும். சுமார் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை இந்த போதை நீடிக்கும். ஆகாயத்தில் மிதப்பது போன்ற மாயையை தோற்றுவிக்கும். நடக்காதது நடப்பது போல் பிரமையை ஏற்படுத்தும். இதனை பயன்படுத்துபவரை அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது.

பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் இந்த போதைப்பொருளை படித்த இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் இளம்பெண்களும் அடக்கம் என்பது திடுக்கிட வைக்கும் தகவல் ஆகும். மது, கஞ்சா, புகையிலை பழக்கத்துக்கு ஆளானவர்கள் கூட மீண்டு விடலாம். ஆனால் எல்.எஸ்.டி. ஸ்டாம்பு போதை பொருளுக்கு அடிமையானால் அதில் இருந்து மீளவே முடியாது. அந்த அளவுக்கு சுண்டி இழுக்கும் தன்மை கொண்டது.

இந்த புதிய ஸ்டாம்பு போதை பொருள் புதுவை மாநிலத்தில் விற்கப்படுவதாக தகவல் அறிந்து முதலில் போலீசாரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதன் பின்னணியை அறிய 3 வாரங்களாக போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது தான் லாஸ்பேட்டை வள்ளலார் நகரை சேர்ந்த அருண் (வயது 30) என்பவர் இந்த போதை பொருளுக்கு அடிமையாகி இருப்பதும், அதை மற்றவர்களுக்கு விற்று வந்ததும் அம்பலமானது. உடனே அவரை பிடித்து விசாரித்ததில் தனியார் மருந்து கம்பெனியின் விற்பனை பிரதிநிதி என்பது தெரியவந்தது.

அதிக போதை தரும் இந்த எல்.எஸ்.டி. ஸ்டாம்பு எங்கிருந்து அருணுக்கு கிடைத்தது? சர்வதேச கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

அதாவது, பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் கம்பெனியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக அருண் வேலை பார்த்து வந்துள்ளார். அடிக்கடி கம்பெனி வேலை வி‌ஷயமாக பெங்களூருவுக்கு சென்றபோது சக ஊழியர்களுடன் மது குடிக்க சென்ற இடத்தில் இந்த எல்.எஸ்.டி. ஸ்டாம்பு அவருக்கு கிடைத்துள்ளது.

அதை பயன்படுத்திய அருண் அதன்பிறகு தொடர்ச்சியாக வாங்கி பயன்படுத்தியதுடன் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் சுமார் 5 மடங்கு வரை லாபம் கிடைத்துள்ளது. அதன்பின் அவர் பெங்களூரு செல்லும் போதெல்லாம் இந்த எல்.எஸ்.டி. ஸ்டாம்பை அதிக அளவில் வாங்கி வந்து தனக்கு தெரிந்தவர்கள் மூலம் சுற்றுலா பயணிகளுக்கும், சில கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் தான் போலீசார் ரகசியமாக கண்காணித்து போதை ஸ்டாம்பு விற்ற அருணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுவித போதைப்பொருளான எல்.எஸ்.டி. ஸ்டாம்பை மீண்டும் விற்பனை செய்யாமல் தடுக்க போலீசார் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவரிடம் கேட்ட போது, ‘எல்.எஸ்.டி. ஸ்டாம்பு எனும் போதைப்பொருளானது மிகவும் கொடியது. இதற்கு பயன்படுத்தப்படும் ‘லைசெர்ஜிக் டை எத்திலமைடு’ என்ற வேதிப்பொருள் உடலுக்கு பெரும் கேடு விளைவிக்க கூடியது. இதனை பயன்படுத்தி போதைக்கு அடிமையாகி விட்டால் அதில் இருந்து மீண்டு வருவது சிரமம். குறைவான விலையில் அதிக போதை கிடைக்கிறது என்பதால் இதை அதிகம் விரும்புகிறார்கள். இதனை பயன்படுத்துவோரின் மூளை, நரம்பு மண்டலம் முழுவதுமாக பாதிக்கப்படும். ஒருகட்டத்தில் சுய நினைவையே இழந்து மன நோயாளி போன்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். இது மிகவும் ஆபத்தானது. போதைப்பொருட்களை பயன்படுத்துவதே உடலுக்கு கேடு. அதிலும் எல்.எஸ்.டி. ஸ்டாம்பு மிகவும் கேடு விளைவிக்கக் கூடியது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அவர்களிடம் ஏதாவது மாற்றம் தெரியவந்தால் உடனடியாக அறிவுரை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்