வறட்சி பாதித்த பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை கிராம தரிசனம் செய்வதாக குமாரசாமி நாடகமாடுகிறார் எடியூரப்பா குற்றச்சாட்டு

வறட்சி பாதித்த பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை என்றும், கிராம தரிசனம் செய்வதாக குமாரசாமி நாடகமாடுகிறார் என்றும் எடியூரப்பா குற்றம்சாட்டினார்.

Update: 2019-06-05 22:41 GMT
பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

கடும் வறட்சி

கர்நாடகத்தில் கூட்டணி அரசு இருந்தாலும் அது செத்துவிட்டது போல் உள்ளது. விதான சவுதா காலியாக இருக்கிறது. கிராம தரிசனம் செய்வதாக கூறி முதல்-மந்திரி குமாரசாமி நாடகமாடுகிறார். இதற்கு முன்பு அவர் தங்கிய கிராமங்களின் நிலை எப்படி இருக்கிறது என்பது அவருக்கு தெரியாது. பள்ளியில் தங்க குமாரசாமி திட்டமிட்டுள்ளார். கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது.

மந்திரிகள் வறட்சி பகுதிகளுக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. ஜிந்தால் நிறுவனத்திற்கு 3,667 ஏக்கர் நிலத்தை கர்நாடக அரசு ஒதுக்கியுள்ளது. இதை கண்டித்து பா.ஜனதா போராட்டம் நடத்தும். அந்த நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் வேண்டுமானாலும் நிலத்தை வழங்கட்டும். அதைவிட்டு நிலத்தை விற்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

அழுத்தம் கொடுக்க வேண்டும்

இது மிக முக்கியமான விவகாரம். இந்த விஷயத்தில் மத்திய மந்திரிகள் சதானந்தகவுடா, சுரேஷ் அங்கடி ஆகியோர் தலையிட்டு, நிலம் விற்கப்படுவதை தடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு மத்திய மந்திரிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு கூட மந்திரி பதவி வழங்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள்.

கர்நாடகத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்க நான் முயற்சி செய்வேன். இதுகுறித்து எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவிடம் பேசுவேன். தைரியம் இருந்தால் காங்கிரசார் பரமேஸ்வரை முதல்-மந்திரியாக்க வேண்டும். கர்நாடகத்தில் நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மாநில மக்கள் வெற்றி வாய்ப்பை தந்துள்ளனர்.

குரல் கொடுக்க வேண்டும்

நாங்கள் எவ்வாறு இந்த பொறுப்பை நிர்வகிக்கிறோம் என்பதன் அடிப்படையில் எங்கள் கட்சியின் எதிர்காலம் உள்ளது. 25 எம்.பி.க்களும் கர்நாடக பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்