காங்கிரசில் அதிருப்தியை சரிசெய்ய ராகுல்காந்தி தலையிட வேண்டும் பிரசார குழு தலைவர் எச்.கே.பட்டீல் பேட்டி

காங்கிரசில் அதிருப்தியை சரிசெய்ய ராகுல் காந்தி தலையிட வேண்டும் என்று பிரசார குழு தலைவர் எச்.கே.பட்டீல் கூறினார்.

Update: 2019-06-05 22:32 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்- ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. குமார சாமி முதல்-மந்திரியாக உள்ளார். மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பா.ஜனதா தலைவர்களை நேரில் சந்தித்து பேசியதால், அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆட்சியை தக்கவைக்க, அதிருப்தியாளர்களுக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

இதற்கு காங்கிரசின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ., தனக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளார். அதுபோல் மந்திரி பதவி கிடைக்காததால் ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார். இதனால் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சுயபரிசோதனை

இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் பிரசார குழு தலைவர் எச்.கே.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரசின் மூத்த தலைவர்கள் ராமலிங்கரெட்டி, ரோஷன் பெய்க் ஆகியோர் கட்சியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் கட்சியில் ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டியுள்ளது. கட்சியில் அதிருப்தியை சரிசெய்ய இந்த பிரச்சினையில் ராகுல் காந்தி தலையிட வேண்டும். கட்சியில் நிலவும் பிரச்சினைகளுக்கு சித்தராமையாவை குறை கூறுவது சரியல்ல.

அவர் எங்கள் கட்சியின் தலைவர். அனைவரும் சேர்ந்து, கட்சியை பலப்படுத்த வேண்டியது அவசியம். கட்சியில் கருத்து வேறுபாடுகள் எழுவது சகஜம். அதை கட்சியில் விவாதித்து தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, ஊடகங்களிடம் கூறுவது சரியல்ல. இதை கட்சியில் உள்ள ஒவ்வொரு நிர்வாகியும் புரிந்துகொள்ள வேண்டும்.

மந்திரிக்கு கடிதம்

ஜிந்தால் நிறுவனத்திற்கு 3,666 ஏக்கர் நிலத்தை வழங்குவது சரியல்ல. ஜிந்தால் நிறுவனம், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை எதுவும் பாக்கி இல்லை என்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறியிருக்கிறார். அவரது இந்த கருத்தில் உண்மை இல்லை. அந்த நிறுவனம் அரசுக்கு பாக்கி வைத்துள்ளது. இதுகுறித்து ஆதாரங்களுடன் அந்த மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதனால் அந்த நிறுவனத்திற்கு நிலம் வழங்கும் முடிவை மாநில அரசு வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு எச்.கே.பட்டீல் கூறினார்.

மேலும் செய்திகள்