கர்நாடக காவிரி படுகையில் 2-வது நாளாக ஆய்வு காவிரி ஆணைய உயர்மட்ட குழுவினர் ஹேமாவதி, ஹாரங்கி அணைகளை பார்வையிட்டனர்
கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள அணைகளில் 2-வது நாளாக காவிரி ஆணைய உயர்மட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் ஹேமாவதி, ஹாரங்கி அணைகளில் நீர் இருப்பு, வரத்து குறித்து நேரில் பார்வையிட்டனர்.
மைசூரு,
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலங்கள் இடையே காவிரி நீரை பகிர்ந்துகொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் (மே) 28-ந்தேதி இந்த ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நடந்தது. அப்போது கர்நாடக அரசு ஜூன் மாதத்தில் குறுவை சாகுபடிக்காக தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அதுபோல் கர்நாடக அணைகளில் போதிய அளவு நீர் இருப்பு இல்லை என்றும், தற்போது அணைகளில் உள்ள நீர் குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், எனவே தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதில் சிக்கல் இருப்பதாகவும் கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உயர்மட்டக் குழுவினர் வருகை
இந்த நிலையில் கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள அணைகளில் நீர் இருப்பு, வரத்து, வெளியேற்றம் குறித்து ஆய்வு செய்ய காவிரி மேலாண்மை ஆணைய உயர்மட்டக் குழுவினர் நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள் முதல் நாளில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவில், மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்பு பொறியாளர் முரளி மோகன், தமிழ்நாடு பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் தேவராஜ், கேரள நீர்ப்பாசனத் துறை இணை இயக்குனர் சுதீர் படிக்கல், புதுச்சேரி பொதுப்பணித் துறை அதிகாரி சுரேஷ், தமிழ்நாடு பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் ஜே.கோபி, கர்நாடக நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் மதுசூதன், பெங்களூரு நீர்ப்பாசனத் துறை பொறியாளர் ஷங்கர் கவுடா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
2-வது நாளாக ஆய்வு
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய உயர்மட்டக் குழுவினர் நேற்று 2-வது நாளாக காவிரி படுகையில் உள்ள ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் ஆய்வு பணியை மேற்கொண்டனர். அதாவது, ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹேமாவதி, குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா குசால்நகரில் உள்ள ஹாரங்கி ஆகிய அணைகளில் இந்த ஆய்வு பணி நடந்தது.
இந்த இரு அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீர் கே.ஆர்.எஸ். அணைக்கு சென்றடையும். இதனால் இந்த இரு அணைகளில் தற்போதைய நீர் இருப்பு, வெளியேற்றப்படும் தண்ணீர் அளவு, நீர்வரத்து ஆகியவற்றை இந்த குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கபினி அணை
இந்த குழுவினர் 3-வது நாளாக இன்றும் (வியாழக் கிழமை) கர்நாடக காவிரி படுகையில் உள்ள மற்றொரு முக்கிய அணையான மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் அமைந்திருக்கும் கபினி அணையில் ஆய்வு நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வை முடித்துக்கொண்டு இந்த குழுவினர் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் நீர் இருப்பு, நீர் வெளியேற்றம், நீர்வரத்து குறித்து ஆய்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.