பெங்களூருவில் மரங்கள் கணக்கெடுப்பு விரைவில் தொடங்கும் மாநகராட்சி கமிஷனர் தகவல்

பெங்களூருவில் மரங்கள் கணக்கெடுப்பு விரைவில் தொடங்கும் என்று மாநகராட்சி கமிஷனர் கூறினார்.

Update: 2019-06-05 22:21 GMT
பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மேயர் கங்காம்பிகே மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றினார். இந்த நிகழ்ச்சியில் மேயர் பேசியதாவது:-

பெங்களூருவில் 198 வார்டுகளிலும் மரக்கன்றுகள் நடப்படும். உலக சுற்றுச்சூழல் தினத்தில் மட்டும் மரக்கன்றுகளை நட்டால் போதாது. வாழ்நாள் முழுவதும் சுற்றுச்சூழலை காப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

7 மரக்கன்றுகள் நட வேண்டும்

மரக்கன்றுகளை நட்டால் மட்டும் போதாது, அவைகள் மரங்களாக வளரும் வரை அவற்றை பராமரிக்க வேண்டும். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 7 மரக்கன்றுகளை நட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. எங்கெங்கு இடவசதி உள்ளதோ அங்கு மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்.

இவ்வாறு மேயர் கங்காம்பிகே பேசினார்,,

இந்த விழாவில் மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பேசுகையில், “பெங்களூரு மாநகராட்சியிடம் 2.50 லட்சம் மரக்கன்றுகள் உள்ளன. இந்த மழை காலத்தில் இந்த மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். மேலும் 6.50 லட்சம் மரக்கன்றுகள் பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளோம். பெங்களூருவில் மரங்கள் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மிக விரைவாக இந்த பணிகள் தொடங்கும்” என்றார்.

மேலும் செய்திகள்