காப்பீடு செய்தால் வறட்சியால் பாதிக்கும் தென்னை மரத்திற்கு இழப்பீடு; வேளாண் இணை இயக்குனர் தகவல்

காப்பீடு செய்தால் வறட்சியால் பாதிக்கும் தென்னை மரத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-05 22:30 GMT

மதுரை,

மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் குமார வடிவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தென்னை சாகுபடி விவசாயிகள் தனிப்பயிராகவோ, ஊடுபயிர் பரப்பில் வரிசையாகவோ, வீட்டுத்தோட்டத்திலே பலன் தரக்கூடிய 5 மரங்களாவது சாகுபடி செய்தால் தென்னைமர காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யலாம். மேலும் ஆண்டிற்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய மரங்களையும் இந்த திட்டத்தில் சேர்க்கலாம். குட்டை மற்றும் ஒட்டு ரகங்கள் 4 ஆண்டு முதலும், நெட்டை ரகங்கள் 2 ஆண்டு முதல் 60 ஆண்டுகள் வரை காப்பீடு செய்யலாம். ஒரு எக்டருக்கு சுமார் 175 மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய தகுதியாகும்.

காப்பீட்டு தொகை மானியம் 50 சதவீதம் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியமும், 25 சதவீதம் மாநில அரசும் ஏற்றுக்கொள்கின்றன. மீதி 25 சதவீதம் விவசாயிகள் செலுத்த வேண்டும். தென்னை மரங்கள் பாதிக்கப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்குள் வேளாண் காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். காப்பீடு காலத்தில் மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டால் இழப்பீடு வழங்கப்படும். ஏற்கனவே பாதிக்கப்பட்ட மரங்கள் காப்பீடு செய்யப்பட்டு இருந்தால் இழப்பீடு வழங்கப்பட மாட்டாது. ஆகவே நன்கு பராமரிக்கப்படும் வளமான காய்கள் உள்ள மரங்களை மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட 4 வயது முதல் 15 வயது வரை உள்ள தென்னை மரம் ஒன்றுக்கு 900 ரூபாயும், 16 முதல் 60 வயதுள்ள மரங்களுக்கு 1,750 ரூபாயும் இழப்பீடு தொகையாக வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்