ரஷியாவில் மருத்துவம் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்காக 2 ஆயிரம் இடங்கள் அதிகரிப்பு இந்த ஆண்டு கூடுதலாக 50 சதவீதம் பேர் படிக்க செல்கிறார்கள்
ரஷியாவில் மருத்துவம் பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்காக 2 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த ஆண்டு கூடுதலாக 50 சதவீதம் பேர் படிக்க செல்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னை,
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் தென் இந்திய ரஷிய கூட்டமைப்பு தூதரகத்தின் துணை தூதர் யூரி எஸ்.பிலோவ், தென் இந்திய ரஷிய கூட்டமைப்பு தூதரகத்தின் கலாசார துணை தூதர் ஜெனடி ஏ.ரோகலேவ், ‘ஸ்டடி அப்ராடு’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-
ரஷிய கல்வி கண்காட்சி வருகிற 8, 9-ந் தேதிகளில் சென்னை ஆழ்வார்ப்பேட்டை, கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கண்காட்சி ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் ரஷியாவில் 10 பல்கலைக்கழகங்கள் பங்கு பெற உள்ளன.
பெற்றோர், மாணவ-மாணவிகள் ரஷியாவுக்கு சென்று படிப்பதற்கான சந்தேகங்களை இந்த கண்காட்சியில் தீர்த்து கொள்ளலாம். கண்காட்சியை ரஷிய அறிவியல் கலாசார மையம் மற்றும் ரஷிய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான, இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான ஸ்டடி அப்ராடு ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
2 ஆயிரம் இடங்கள் அதிகரிப்பு
ஆங்கில வழி கல்வியில் ரஷியாவில் மருத்துவம் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக 3 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டு வந்தன. இந்த கல்வியாண்டில் இருந்து (2019-2020) 5 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளன. அதாவது, 2 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவில் மருத்துவம் படிக்க இந்திய மாணவர்கள் நீட் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆங்கில வழியில் மருத்துவம் படிக்க 6 ஆண்டுகளும், ரஷிய மொழியில் மருத்துவம் படிக்க 7 ஆண்டுகளும் ஆகும். இந்திய மாணவர்கள் அங்கு மருத்துவம் படித்து வந்தாலும், இந்திய மருத்துவ கவுன்சிலில் தற்காலிகமாக பதிவு செய்து, மருத்துவமனைகளில் ஓராண்டு பயிற்சி பெற வேண்டும்.
அதேபோல், என்ஜினீயரிங் படிப்பு படிக்க 4 ஆண்டுகள் ஆகும். ரஷிய மொழியில் இந்த படிப்பை படிக்க ஓராண்டு கூடுதலாக தேவைப்படும்.
50 சதவீதம் பேர் கூடுதலாக செல்வார்கள்
சென்னையை தொடர்ந்து, 10-ந் தேதி திருச்சியில் ஓட்டல் பெமினாவிலும், ஐதராபாத்தில் ஓட்டல் மேரி கோல்ட்டிலும், 12-ந் தேதி சேலம் ஜிப்ஸ் பை ஜி.ஆர்.டி. ஓட்டலிலும் மற்றும் 13-ந் தேதி மதுரையில் உள்ள ஓட்டல் தி மதுரை ரெசிடென்சியிலும் கல்வி கண்காட்சி நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டுகளில் தென் இந்தியாவில் இருந்து ரஷியாவுக்கு படிப்பதற்காக 1,800 பேர் சென்றனர். இந்த ஆண்டு அதில் இருந்து 50 சதவீதம் பேர் கூடுதலாக செல்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ரஷியாவில் இந்திய மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.