திருச்சி பஞ்சப்பூரில் 80 ஏக்கரில் ஆக்சிஜன் பூங்கா மாநகராட்சி ஆணையர் தகவல்

திருச்சி பஞ்சப்பூரில் 80 ஏக்கரில் ஆக்சிஜன் பூங்கா அமைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Update: 2019-06-05 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாநகராட்சியின் பொன்மலை கோட்டம் 35-வது வார்டு ஆர்.எஸ்.புரம் பூங்கா அருகில் உள்ள சாலை மற்றும் வீடுகளின் முன்புறம், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலையில் அப்பகுதி குடியிருப்பு நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இதேபோல் அரியமங்கலம், ஸ்ரீரங்கம், கோ-அபிசேகபுரம் கோட்டங்களில் உள்ள தெரு பகுதிகளில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் 20 குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் பொதுமக்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள்.

பின்னர் ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்ததாவது:-

திருச்சி மாநகரை பசுமையான நகரமாக மாற்றுவதற்கு பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க தற்போது வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கும் திட்டத்தை தொடங்கி உள்ளோம். இதற்காக முதற்கட்டமாக 4 கோட்டங்களில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு, மூங்கில் கூண்டுகளை அமைத்து அந்தந்த வீட்டு உரிமையாளரின் பராமரிப்பில் ஒப்படைத்து உள்ளோம். இதில் பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்பு நலச்சங்கங்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள்.

மேலும், மாநகரை தூய்மையாக வைக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது சுற்றுச்சூழல் தான். எனவே, ஒவ்வொருவரும் வீட்டில் மரக்கன்றுகளை நட்டு அதை தாங்கள் பொறுப்பில் பராமரிக்க வேண்டும். இந்த மரக்கன்றுகள் நடும் திட்டம் பொதுமக்கள் இயக்கமாக மாறவேண்டும்.

மாநகராட்சி சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் உள்ள பசுமை பூங்கா மற்றும் கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம் பகுதியில் ஆக்சிஜன் பூங்கா 80 ஏக்கரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு 20 ஆயிரம் பீமா மூங்கில் பயன்படுத்தி இந்த பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. இந்த வகையான மூங்கில்கள் அதிக அளவிலான ஆக்சிஜனை வெளியிடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்