சென்டிரல் ரெயில் நிலையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.;

Update: 2019-06-05 21:30 GMT
சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று காலை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது. முகாமை தெற்கு ரெயில்வே கூடுதல் ரெயில்வே கோட்ட மேலாளர் இளங்கோவன் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நமக்கு மிகவும் தேவை. உலகம் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இதுகுறித்து அதிக பொறுப்பு உள்ளது. இந்த சுற்றுச்சூழலை அடுத்த தலைமுறைக்கு தொடர்ச்சியாக எந்த பாதிப்பும் இல்லாத அளவிற்கு கொடுக்கக்கூடிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. ரெயில்வே துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ‘ஈக்கோ ஸ்மார்ட் நிலையம்’ என்ற துறை உள்ளது. இது முதன்முதலாக சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஆரம்பித்துள்ளோம். இதையடுத்து 19 ரெயில் நிலையங்களில் தொடர்ச்சியாக தெற்கு ரெயில்வே சார்பில் தொடங்க உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் விழிப்புணர்வு பேரணியை கூடுதல் ரெயில்வே கோட்ட மேலாளர் முகுந்த் கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேலும் சென்டிரல் ரெயில்வே இயக்குனர் குகனேசன் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர். இதேபோல எழும்பூர் ரெயில் நிலையத்திலும் நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது.

மேலும் செய்திகள்