உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாவட்ட நீதிபதி, கலெக்டர் மரக்கன்றுகளை நட்டனர்

உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி பெரம்பலூரில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், அரியலூரில் கலெக்டர் விஜயலட்சுமியும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

Update: 2019-06-05 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று உலக சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான லிங்கேஸ்வரன் தலைமையில், நீதிமன்றங்களின் சுற்றுச்சூழல்களை பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பேணுவதன் அவசியத்தை தெரிவிக்கும் விதமாகவும் வனத்துறை சார்பாக வழங்கப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி விஜயகாந்த், தலைமை நீதித்துறை நடுவர் முரளிதரன், சார்பு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளருமான வினோதா, கூடுதல் மகிளா நீதிமன்ற நடுவர் முரளிதரன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, வக்கீல்கள் சங்க செயலாளர் சுந்தரராஜன், அட்வகேட்ஸ் அசோசியேஷன் சங்க செயலாளர் துரை, வக்கீல்கள், மாவட்ட வன அலுவலர் அசோகன், வனச்சரக அலுவலர்கள் சசிகுமார், தங்கராசு, வனவர்கள் பாண்டியன், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள், வனத்துறையினர் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து சட்ட உதவி முகாம் நடந்தது.

அரியலூரில் மாதிரி பள்ளியில்...

இதேபோல் அரியலூர் மாவட்ட வனத்துறையின் சார்பில் சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி அஸ்தினாபுரம் மாதிரி பள்ளியில் கலெக்டர் விஜயலட்சுமி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். முன்னதாக பசுமை உறுதிமொழியினை கலெக்டர் வாசிக்க, அதனை மாணவ- மாணவிகள் ஏற்றுக்கொண்டனர். உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி சுற்றுச்சூழலை பேணிக்காப்பது தொடர்பாக, பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வன அதிகாரி இளங்கோவன், வனச்சரகர் சக்திவேல், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சிநாதன், பள்ளித்துணை ஆய்வாளர் பழனிசாமி, பள்ளி தலைமையாசிரியர் வேல்முருகன், தேசியப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணபாலினி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்