ஈரோட்டில் ஆகஸ்டு மாதம் நடக்கிறது: ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம், 11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம்

ஈரோட்டில் வருகிற ஆகஸ்டு மாதம் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

Update: 2019-06-05 23:00 GMT

ஈரோடு,

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 22–ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 2–ந்தேதி வரை இந்திய ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஈரோட்டில் நடைபெற உள்ள இந்திய ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாமில், தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், தேனி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

முகாம் நடைபெறும் அனைத்து நாட்களிலும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் வ.உ.சி. பூங்காவில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளவும் மற்றும் தற்காலிக கழிப்பறை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முகாமில் பங்கேற்பவர்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.

வட்டார போக்குவரத்து துறையின் மூலம் முகாமில் பங்கேற்பவர்கள் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் தடுப்புகளை அமைக்க வேண்டும். மேலும் போலீஸ் துறையினர் உரிய பாதுகாப்பினை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரத்துறையினர் 2 டாக்டர்கள், 2 செவிலியர்கள், முதல் உதவி பெட்டி, ஆக்சிஜன் சிலிண்டர் அடங்கிய 108 ஆம்புலன்சுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். முகாம் நடைபெறும் ஆகஸ்டு மாதம் 22–ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 2–ந்தேதி வரை பஸ் நிலையத்தில் மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை மேற்கண்ட 11 மாவட்டங்களில் சிறப்பு பஸ்கள் இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்திய ராணுவத்துக்காக ஆள்சேர்ப்பு முகாம் ஈரோட்டில் மிக சிறப்பாக நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.

ஒவ்வொரு துறை அலுவலர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள பணிகளை அந்தந்த துறை அலுவலர்கள் முழுமையாக மேற்கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஊர்வலம் மற்றும் புகைப்பட கண்காட்சி நடத்திட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, இந்திய ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு இயக்குனர் கர்னல் ரானே, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், முன்னாள் படைவீரர் நலன் துணை இயக்குனர் சந்திரசேகரன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்