அரூர், தர்மபுரியில் 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு

அரூர், தர்மபுரியில் 3 வீடுகளில் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.

Update: 2019-06-05 22:15 GMT
அரூர்,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ராமியம்பட்டியை சேர்ந்தவர் சிவன் (வயது45). இவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மாடியில் தூங்க சென்றார். நேற்று காலை எழுந்து வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை, ரூ.23 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. மர்ம ஆசாமிகள் நள்ளிரவு பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதேபோன்று அதேபகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவருடைய வீட்டின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் பீரோவில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், 1 பவுன் நகை ஆகியவற்றை திருடிச்சென்றனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து சிவன், ராமலிங்கம் ஆகியோர் கோபிநாதம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தர்மபுரி ரெயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றிருந்தார். இந்தநிலையில் ரெங்கராஜ் வீட்டுக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி போலீசார் நேற்று அங்கு நேரில் சென்று தடயங்களை சேகரித்தனர். வீட்டில் எவ்வளவு நகை மற்றும் பணம் திருட்டு போனது என்பது குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை. இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்