எஸ்.பெரியபாளையத்தில் முறைகேடாக இயங்கிய 5 சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு; மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை

திருப்பூர் அருகே எஸ்.பெரியபாளையத்தில் முறைகேடாக இயங்கிய 5 சாய ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Update: 2019-06-05 23:00 GMT
திருப்பூர்,

திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களை போலவே சாய, சலவை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. இவை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுத்தான் இயங்க வேண்டும். ஆனால் அனுமதியின்றியும், முறைகேடாகவும் இயங்கி வரும் சாய, சலவை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் முறைகேட்டில் ஈடுபடுகிற ஆலைகள், நிறுவனங்களை கண்டுபிடிக்க அதிகாரிகள் ஆய்வை தீவிரப்படுத்தி வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் திருப்பூர் எஸ்.பெரியபாளையத்தில் சில சாய ஆலைகள் முறைகேடாக இயங்குவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி எஸ்.பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் 5 சாய ஆலைகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஆலைகளில் இருந்து சாயக்கழிவுநீர் பொதுசுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த 5 சாய ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விதிமுறைகளை பின்பற்றாமலும், முறைகேடாகவும் இயங்கி வந்தது தெரியவந்தது.

மேலும், அந்த பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் குழாய் மூலம் சாயக்கழிவுநீரை வெளியேற்றி வந்ததும் கண்டுபிடித்தது. இதனைத்தொடர்ந்து இந்த 5 சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவின் பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று 5 சாய ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி செந்தில் விநாயகம் கூறியதாவது:-

திருப்பூரில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். முறைகேடுகளில் ஈடுபடும் சாய ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இது தொடர்பாக எந்த நேரத்திலும் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த செல்போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.அதன் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து இயங்க முடியாத சூழ்நிலை உருவாகும் என எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்