மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சூறைக்காற்று: 100 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதம்
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சூறைக்காற்றால் 100 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு,
விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. அவ்வப்பேது மழையும் பெய்து வருகிறது. இந்த சூறைக்காற்றால் பல இடங்களில் மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்து விழுந்தன. இதனால் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு கடந்த 5 நாட்களாக மின்வினியோகம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் நேற்றும் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. அப்போது காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கடுவனூர், பாக்கம், புதூர், லக்கிநாயக்கன்பட்டி, புதுப்பேட்டை, பொரசப்பட்டு, ஈருடையாம்பட்டு, சவேரியார்பாளையம் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்திருந்த கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தது.
ஏற்கனவே தண்ணீர் இன்றி கரும்பு பயிர்கள் கருகி வரும் நிலையில், தற்போது காற்றில் சாய்ந்து சேதமடைந்ததை அறிந்த விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கடுவனூர் பகுதி விவசாயிகள் கூறுகையில், நாங்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் கரும்பு சாகுபடி செய்தோம். தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டால் சொட்டுநீர் பாசனம் மூலம் கரும்புகளுக்கு தண்ணீர் பாய்ச்சினோம். நன்கு வளர்ந்து வந்த நிலையில் தற்போது சூறைக்காற்றில் அனைத்து கரும்புகளும் சாய்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் அதிகாரிகள் சேதமடைந்த கரும்புகளை பார்வையிட்டு எங்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.