ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
முஸ்லிம்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான் பண்டிகை. இந்த பண்டிகையை நேற்று நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்திலும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலையிலேயே எழுந்து புத்தாடைகளை அணிந்து பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம்கள் சென்று அங்கு நடந்த சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டனர். சிறுவர், சிறுமிகளும் விதவிதமான ஆடைகளை அணிந்தபடி தொழுகையில் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் மந்தக்கரை யூமியா ஜாமி மஸ்ஜித் பள்ளிவாசல், பாகர்ஷா வீதி பாகர்ஷா மஸ்ஜித் பள்ளிவாசல், வண்டிமேடு மண்டி மஹல்லா மஸ்ஜித் பள்ளிவாசல், வடக்கு தெரு ஷெரீப் மஹல்லா மஸ்ஜித் பள்ளிவாசல், வாலாஜா மஸ்ஜித் பள்ளிவாசல், மருதூர் தக்வா மஸ்ஜித் பள்ளிவாசல், புதுச்சேரி சாலையில் உள்ள ரஹ்மான் மஸ்ஜித் பள்ளிவாசல், ஒதியத்தூர் பள்ளிவாசல் உள்பட விழுப்புரம் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடந்த சிறப்பு தொழுகையில் விழுப்புரம் கிளை நிர்வாகிகள் இப்ராஹீம், இமாம்அக்பர் உள்பட ஏராளமான முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
விக்கிரவாண்டியில் கீழ்மாட வீதியில் உள்ள ஜூம்மா பள்ளிவாசலில் இருந்து நேற்று காலை முஸ்லிம்கள் ஊர்வலமாக பஸ் நிலையம், மெயின்ரோடு வழியாக வடக்கு புறவழிச்சாலை அருகில் வந்தனர். தொடர்ந்து, அவர்கள் அங்குள்ள ஒயிட் மஸ்ஜித் பள்ளிவாசல் அருகே உள்ள கபர்ஸ்தான் மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டனர். இதைபோல் முண்டியம்பாக்கம், ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.
திண்டிவனம் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இருந்தும் ஊர்வலமாக புறப்பட்ட முஸ்லிம்கள் திண்டிவனம்-செஞ்சி சாலையில் உள்ள கபர்ஸ்தான் ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர். அதன் பிறகு அங்கு ரம்ஜான் சிறப்பு தொழுகை காலை 9 மணிக்கு தொடங்கியது. நவாப் பள்ளிவாசல் இமாம் ஹாஜி நயாஸ் அகமது தொழுகையை தொடங்கி வைத்தார். மவுலவி ஷேக் தாவூத், நவாப்பள்ளி வாசல் முத்தவல்லி அஜ்மல் அலி மற்றும் முத்தவல்லிகள் அஸ்கர் அலி, அப்துல்வகாப், சம்சுகான், அப்துல்ஜபார், வக்கீல்கள் அம்ஜத்அலி, சர்வர்கான், முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுசெயலாளர் இடிமுரசு இஸ்மாயில், முஸ்லீம் மக்கள் கழக நிறுவன தலைவர் ஜைனுதீன் உள்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.
செஞ்சி நகரில் வசிக்கும் ஏராளமான முஸ்லிம்கள் நேற்று காலை சத்திரத்தெரு பெரிய பள்ளிவாசல் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக செஞ்சிக்கோட்டையில் உள்ள சதாத்துல்லாகான் மசூதி வளாகத்தை வந்தடைந்தனர். அதன் பிறகு பெரிய பள்ளிவாசல் இமாம் ஷமீம்அக்தர் தலைமையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் டாக்டர் சையத்சத்தார், சையத் மஜித்பாபு, அப்துல்கலாம், லக்கி கலீல், ஜான்பாஷா, ரப்பானி, அசுதுல்லா, ஜெ.எஸ்.சர்தார், அஷ்ரப், முபாரக் மற்றும் செஞ்சி பகுதி பள்ளிவாசல்களை சேர்ந்த தலைவர்கள் உள்பட ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கொத்தமங்கலம் ஈத்கா மைதானத்திலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. முன்னதாக செஞ்சி கூட்டுரோட்டில் செஞ்சி வட்ட ஜமாத் தலைவர் சையத் மஜித்பாபு பிறை கொடி ஏற்றினார்.திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், மணலூர்பேட்டை பகுதிகளிலும் நேற்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.