திண்டிவனம் அருகே பட்டப்பகலில் துணிகரம்: வேளாண்மைத்துறை பெண் அதிகாரியிடம் 7 பவுன் நகை பறிப்பு வாலிபருக்கு வலைவீச்சு
திண்டிவனம் அருகே ஸ்கூட்டரில் சென்ற போது வேளாண்மைத்துறை பெண் அதிகாரியை வழிமறித்து 7 பவுன் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டிவனம்,
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திண்டிவனம் அருகே உள்ள கிளியனூரை சேர்ந்தவர் குமர குரு. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 31). இவர்களுக்கு தீபக்(8) என்ற மகன் உள்ளான். விஜயலட்சுமி திண்டிவனம்-மரக்காணம் சாலையில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில், உதவி வேளாண்மை அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் திண்டிவனம் வேளாண்மைத்துறை அலுவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தீபக் ஓமந்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று காலை தீபக் படித்து வரும் பள்ளியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜயலட்சுமி தனது மகனுடன் ஒரு ஸ்கூட்டரில் ஓமந்தூர் பள்ளிக்கு சென்றார். பின்னர் மதியம் 1 மணியளவில் நிகழ்ச்சி முடிந்ததும் அவர் தனது மகனுடன் ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டார்.
திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையம் அருகே வந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென விஜயலட்சுமியின் ஸ்கூட்டர் மீது மோதுவதுபோல் சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தி னார். இதில் அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி ஸ்கூட்டரை நிறுத்தினார்.
அந்த சமயத்தில் அந்த வாலிபர் விஜயலட்சுமியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து விஜயலட்சுமி கிளியனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நகையை பறிகொடுத்த விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில், வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரின் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் பார்வையிட்டனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், திண்டிவனம் எறையானூர் பகுதியில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
இங்கு மதுவாங்க வரும் குடிமகன்கள் சாலையில் தனியாக செல்லும் பள்ளி மாணவிகள், பெண்களை கேலி, கிண்டல் செய்வதோடு, சில நேரங்களில் நகைகளை பறித்துச் செல்கின்றனர். ஆகவே இங்கு சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மதுவிற்பனையை ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.
பட்டப்பகலில் மகனுடன் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை வழிமறித்து, மர்மநபர் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகையை பறித்துச் சென்ற சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.