மாணவ- மாணவிகள் செல்போனில் கவனம் செலுத்துவதால் தேர்ச்சி பாதிக்கிறது கலெக்டர் ராமன் பேச்சு
மாணவ-மாணவிகள் செல்போனில் கவனம் செலுத்துவதால் தேர்ச்சி பாதிக்கப்படுவதாக கலெக்டர் ராமன் பேசினார்.
வேலூர்,
வேலூரில் உள்ள ஈ.வெ.ரா.மணியம்மை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் 3 லட்சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் கலெக்டர் ராமன் கலந்து கொண்டு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
வேலூர் மாவட்டம் 42 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெரிய மாவட்டம். 3,362 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 6 லட்சத்து 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இன்றைய கணினி உலகத்தில் மாணவ-மாணவிகள் செல்போன் மற்றும் கணினியில் மூழ்கி, படிப்பில் கவனம் செலுத்தாமல் எண்ணங்களை சிதற விடுகின்றனர். இதனால் தேர்ச்சி பாதிக்கப்படுகிறது.
மாணவ-மாணவிகள் எண்ணங்களை சிதற விடாமல் படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக படித்து சிறப்பாக முன்னேற வேண்டும். தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் முன்மாதிரி பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் அனைத்து கட்டமைப்பு வசதிகள் செய்து தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் 171 பள்ளிகளில் எல்.கே.ஜி. ஆங்கில வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இவைகள் எல்லாம் எதிர்கால பிள்ளைகளுக்கு அரசு செயல்படுத்தும் சிறப்பான திட்டமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், பள்ளி தலைமை ஆசிரியை செல்வராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.