எடப்பாடியில் சரபங்கா ஆற்றின் குறுக்கே ரூ.2 கோடியில் புதிய பாலம்
எடப்பாடியில் சரபங்கா ஆற்றின் குறுக்கே ரூ.2 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பாலத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (சனிக்கிழமை) திறந்து வைக்கிறார்.
எடப்பாடி,
எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பட்டி பகுதியில் இருந்து எடப்பாடி பஸ்நிலையம் மற்றும் சேலம் ரோட்டுக்கு செல்ல பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சுற்றிவர வேண்டும். இதனால் சிரமம் அடைந்த அப்பகுதி மக்கள், கவுண்டம்பட்டி-சேலம் மெயின்ரோடு குறுக்கே உள்ள சரபங்கா ஆற்றில் புதிய பாலம் அமைத்து தர தமிழக முதல-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த புதிய பாலம் கட்டும் பணி நிறைவடைந்ததை அடுத்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள்(சனிக்கிழமை) திறந்து வைக்கிறார்.
இதையொட்டி நேற்று மாவட்ட கலெக்டர் ரோகிணி, அந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பாலத்தை திறந்து வைக்கும் முதல்-அமைச்சர் பேசுவதற்காக அதே பகுதியில் மேடை அமைக்கும் பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், சங்ககிரி உதவி கலெக்டர் அமிர்தலிங்கம், தாசில்தார் கேசவன், முன்னாள் நகரமன்ற தலைவர் கதிரேசன், முன்னாள் துணைத்தலைவர் ராமன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாதேஸ்வரன், முன்னாள் மாவட்ட திட்டக்குழுஉறுப்பினர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.